பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

ஒரு பூனை எப்படி தனது தாடையும் கன்னமீசையும் நனையாமல் தண்ணீரையோ பாலையோ அல்லது ஏனையத் திரவங்களையோ அருந்துகின்றது. நாய் நக்கி அருந்தி தனது முகப் பகுதிகளை நனைத்துக் கொள்ளும். ஆனால் பூனையோ நக்கி அருந்தினாலும் லாவகமாக அருந்துகின்றது. தனது மீசை தாடை எதையும் நனைத்துக் கொள்வதில்லை. இது எப்படி? ஆராய்ந்தார்கள் நான்கு விஞ்ஞானிகள். இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். இது பௌதிகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். பூனை செயற்பாட்டு ரீதியாக புவியீர்ப்பு சக்திகளுக்கு எதிராக தனது ஜடத்துவத்தை அல்லது சோம்பேறித்தனத்தை சமநிலைப்படுத்தியே தனது தாகத்தை தீர்த்துக் கொள்கின்றது.
நாய் நீர் அருந்தும் போது தனது நாக்கை ஒரு கரண்டிபோல் சுழற்றிச் சுழற்றிப் பாவித்து இயலுமானவரை நீரை இழுத்தெடுத்து குடிக்கின்றது.


ஆனால் பூனை அப்படியல்ல. தான் எதைக் குடிக்க வேண்டுமோ அந்தத் திரவத்தின் கீழ் பகுதியாக தனது நாவைச் செலுத்தி குடிக்க வேண்டிய பதார்த்தத்தை நாவின் மேற்பரப்பில் சேகரித்து துரிதமாக நாவை வாய்க்குள் இழுத்துக் கொள்கின்றது. இதனால் நாவின் மேற்பகுதியில் அது அருந்த வேண்டிய பதார்த்தம் ஒரு ஓடைபோல் சேர்ந்துகொள்கின்றது. நாவின் மேற்பரப்பில் பதார்த்தம் தேங்கியதும் புவியீர்ப்புத் தன்மையின் தாக்கத்தால் நாக்கு கீழே சரிவதற்கு முன் பூனை தனது நாக்கை உள்ளே இழுத்துக்கொள்கின்றது. இதுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உண்மை. எந்த ஒரு விடயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விஞ்ஞான கண்கொண்டு வித்தியாசமாக நோக்கினால் அதன் இரகசியங்களை புரிந்து கொள்ள முடியும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post
Breaking News
Loading...