அதிகாலையில், தான் மேற்கொண்ட அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சி தோல்வி கண்டதால், தொடர்ந்தும் அலரிமாளிகையில் இருப்பது பாதுகாப்பற்றது என்று கருதியே அவர் முன்கூட்டியே வெளியேற முடிவு செய்திருக்கலாம்.
சர்வதேச அழுத்தங்கள், நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்காக அவ்வாறு செய்திருக்கலாம் அல்லது பொதுமக்களிடம் நற்பெயரைத் தேடிக் கொள்வதற்காகவும் அவ்வாறு செய்திருக்கலாம்
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், சுமுகமான முறையில் அதிகாரக் கையளிப்பு இடம்பெற்றது குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்களும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உள்ளிட்டோரும், வரவேற்புத் தெரிவித்தாலும், இன்னொரு பக்கத்தில், அதிகாரத்தை தக்கவைக்க முயன்றதான குற்றச்சாட்டு மஹிந்த ராஜபக்சவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ இதுபற்றி எதுவும் கூறாவிடினும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்டோர் இந்தக் குற்றச்சாட்டை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவத்தைப் பயன்படுத்தி, அதிகாரத்தை தக்கவைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச முயற்சித்தாரா? என்பது பற்றி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முடிவில் தான் தெளிவாகத் தெரியவரும்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸும், மறுத்திருக்கிறார்கள்.
அதிகாரத்தை சுமுகமாகக் கையளித்தமைக்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியே பாராட்டுத் தெரிவித்திருக்கும் போது, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது அபாண்டம் என்கிறார் பீரிஸ்.
45 ஆண்டுகால அரசியலில் எத்தனையோ வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துப் பழகிப்போன தனக்கு இது ஒன்றும் பெரிய விடயமே அல்ல என்று கூறியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ச, இவ்வளவு இலகுவாக அலரி மாளிகையை விட்டு, தனது பதவியை விட்டு விலக முன்வந்த ஆச்சரியத்தில் இருந்து இன்னமும் பலரால் வெளிவர முடியவில்லை என்பதை மறுக்க முடியாது.
இலங்கையின் அதிகாரக் கட்டமைப்பில் அந்தளவுக்கு தனது குடும்பத்தினரையும், விசுவாசிகளையும் அமர வைத்து, ஒரு மன்னரைப் போல ஆட்சி நடத்தியவர் தான் மஹிந்த ராஜபக்ச.
அதனால் தான், முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்டோரால், எதேச்சாதிகாரத்தை நோக்கி இலங்கை செல்வதான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
முன்னர் எதிர்க்கட்சியில் இருந்தவர்களே கூட சர்வாதிகார ஆட்சி என்றே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை விமர்சித்ததை மறக்க முடியாது.
இடி அமீன் என்று இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விமர்சிக்கப்பட்டதையும் மறந்து விடமுடியாது.
அவ்வாறு பலம் வாய்ந்தவராக அதிகாரத்தைச் செலுத்திய ஒருவர் தேர்தலில் தோல்வி கண்டதையே அவ்வளவு இலகுவாக நம்பமுடியாத நிலையில், அவர் பதவியை விட்டு அமைதியாக விலகிப் போனதை எவ்வாறு தான் நம்ப முடியும்?
மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்றால் கூட, அவர் பதவியை விட்டு அமைதியாக விலகிச் செல்வாரா என்ற சந்தேகம், தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னதாகவே எழுந்திருந்தது.
பி.பி.சி.யின் செய்தியாளர் சார்ள்ஸ் ஹவிலன்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் பலரும் இதனைத் தமது ஆய்வுகளில் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த சந்தேகம் ஏற்பட்டதற்குக் காரணம், மஹிந்த ராஜபக்ச தனது குடும்ப அதிகாரத்தை அந்தளவுக்கு எல்லாத் துறைகளுக்குள்ளேயும், விரிவாக்கிக் கொண்டிருந்தார்.
ஆழ ஊடுருவி அசைக்க முடியாத ஒருவராக மாறியிருந்த அவரது ஆட்சியை, 2022 வரை எவரும் அசைக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல போன்றோர் அவ்வப்போது அச்சுறுத்தி வந்தனர்.
ஆனால், எல்லாமே கடந்த 9ம் திகதி அதிகாலையுடன் மாறிப் போனது. மஹிந்த ராஜபக்ச ஒரு உறுதியான ஆலமரமாக, கிளைபரப்பி விசாலித்து நிற்பதாகவே கருதப்பட்டாலும், அவரது காலுக்குக் கீழ் கறையான்கள் புற்றெடுத்ததை அறியாதிருந்து விட்டார்.
அதனால் அது உளுத்துப் போன மரமாகிப் போனது. தேர்தல் என்ற சிறியதொரு காற்றுக்கே அதனால் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.
மஹிந்த ராஜபக்ச எதற்காக தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே, அலரி மாளிகையில் இருந்து வெளியேற முடிவு செய்தார் என்ற கேள்வி இன்னமும் நீடித்து வருகிறது.
அதிகாலையில், தான் மேற்கொண்ட அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சி தோல்வி கண்டதால், தொடர்ந்தும் அலரி மாளிகையில் இருப்பது பாதுகாப்பற்றது என்று கருதியே அவர் முன்கூட்டியே வெளியேற முடிவு செய்திருக்கலாம்.
சர்வதேச அழுத்தங்கள், நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்காக அவ்வாறு செய்திருக்கலாம். அல்லது பொதுமக்களிடம் நற்பெயரைத் தேடிக் கொள்வதற்காகவும் அவ்வாறு செய்திருக்கலாம். எனினும், தோல்வியடைவதை உணர்ந்து வெளியேற முடிவு செய்து விட்டேன் என்றே கூறுகிறார் மஹிந்த ராஜபக்ச.
ஆனால், கடந்த 10ம் திகதி சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்கு வெளியே கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, தேர்தலுக்கு முதல் நாள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி எது நடந்தாலும் அமைதியான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் தேர்தல் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியதாக தெரிவித்திருந்தார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் கூறியபடியே தேர்தலையும் அமைதியாக நடத்தி விட்டதாகவும், அதிகாரத்தில் இருந்தும் அமைதியாக வெளியேறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவும், ஐ.நா. பொதுச்செயலரும், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும், அதிகாரம் அமைதியாக கைமாற்றப்பட்டதற்கு மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக் கூறியிருந்தன.
மஹிந்த ராஜபக்சவின் பெருந்தன்மையை பாராட்டுவதே இதன் அர்த்தம், என்று கருதினால் அது தவறு. அத்தகையதொரு அமைதியான அதிகார மாற்றத்துக்கு அச்சுறுத்தலான சூழல் ஒன்று இருந்தது என்பதையே அது வெளிப்படுத்தியது.
அதனால் தான், அப்பாடா. அமைதியாக அதிகாரம் கைமாறி விட்டது என்று வாழ்த்துக் கூறப்பட்டது. இவ்வாறு நடந்து கொள்வது சர்வதேச அரங்கில் தனது மதிப்பை உயர்த்தும் என்று மஹிந்த ராஜபக்ச எதிர்பார்த்திருக்கலாம்.
அதைவிட அவருக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி விடுத்திருந்த எச்சரிக்கையும் நினைவில் இருந்திருக்கக் கூடும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அத்தகைய எந்த தொலைபேசி எச்சரிக்கையும் வந்திருக்கவில்லை என்பதை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையை மஹிந்த ராஜபக்சவினால் அவ்வளவு இலகுவாக உதாசீனம் செய்ய முடியாது.
அதைவிட, ஏதாவது அதிகாரக் கையளிப்பில் குழறுபடிகளைச் செய்தால், அது மிக அமைதியாக இருக்க வேண்டும். வன்முறைகள் வெடிக்கும் நிலை உருவானால் அது பாப்பரசரின் பயணத்தைப் பாதிக்கும்.
அது சர்வதேச அரங்கில் தன்னை ஒரு மிக மோசமான ஆட்சியாளராக அறிமுகப்படுத்தும் என்பதையும் மஹிந்த ராஜபக்ச கவனத்தில் கொண்டிருந்தார்.
சீனா உள்ளிட்ட தன்னைப் பாதுகாக்கும் நாடுகள் கூட அத்தகையதொரு இக்கட்டான நிலையில் உதவ முன்வராது என்பதை மஹிந்த ராஜபக்ச நன்கே அறிந்திருந்தார்.
அவ்வாறு சர்வதேச அரங்கில் ஓரம்கட்டப்பட்ட ஒருவராக வலம் வருவது எத்தகைய ஆபத்தான விடயம் என்பதை, கடாபியும், சதாம் ஹுசேனும் எதிர்கொண்ட நிலை அவருக்கு நிச்சயம் உணர்த்தியிருக்கும்.
அது தான் முப்படைகளின் வல்லமை மிக்க தளபதியாக இருந்தாலும், பாதுகாப்புக் கட்டமைப்பில், பலமான ஆதிக்கத்தைக் கொண்டிருந்தாலும், அவரால் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு நீண்ட முயற்சிகளை முன்னெடுக்க முடியாமல் தடுத்திருக்கும்.
இது தான் அதிகாரக் கைமாற்றம் சுமுகமாக இடம்பெறக் காரணம்.
ஒருவேளை பலாத்காரமாக அதிகாரத்தைத் தக்கவைக்க அவர் முயன்றிருந்தால் நிச்சயமாக அதற்கெதிராக இந்தியா போர்க்கொடி உயர்த்தியிருக்கும்.
அதைவிட கொமன்வெல்த் தலைமையில் இருந்தும் மஹிந்த ராஜபக்ச தூக்கி வீசப்பட்டிருப்பார்.
கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவின் தலைவர் தனது இடைக்கால அறிக்கையில் தேர்தல் முற்றிலும் ஜனநாயகமான சூழலில் நடக்கவில்லை என்று குறிப்பிட்டது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
இவ்வாறாக இராணுவ உதவியுடன் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு முயன்றாலும், அதற்கு அவர் தீவிரமாக முயற்சிகளை முன்னெடுக்காது போயிருக்கலாம் என்பதற்கு ஒரு காரணம், அவர் உலகின் முன்பாக தான் தனித்து விடப்பட்ட ஒருவராக மாற விரும்பாததேயாகும்.
அது தன்னையும் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதை மஹிந்த உணர்ந்துணர்ந்து கொண்டிருந்ததால் தான் அதிகாரக் கைமாற்றம் சுமுகமாக நடந்தேறியது.
Thx By - Tamil Win And Wikipedia