திசை மாறிப் போகும் கல்வி

படிப்பது, அறிவை பெறுவதற்கும் வாழ்க்கை தேவைகளை நிறைவுச்செய்ய ஒரு வேலையை தேடுவதற்கும்’ என்பது கல்விக்கு முன்பு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் ஆகும். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பணம் சம்பாதிப்பதே கல்வி கற்பதன் முக்கிய நோக்கமாக ஆகிவிட்டது. இதுதான் இன்றைய மாணவ சமூகத்தின் மூளையில் கட்டாயமாக பதிய வைக்கப்படுகிறது. இதற்கு பெற்றோர் மட்டுமல்ல, மாறி மாறி இந்நாட்டை ஆளும் அரசுகளும் அதற்கு காரணமாகும்.
கல்வி நிலையங்கள் எல்லாம் வர்த்தக மையங்களாகி விட்டன. மாணவர்கள் எல்லாம் அதன் தயாரிப்புகளாக மாறி வருகின்றார்கள். பெருந்தொகையை பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து தனியார் கல்லூரிகளுக்கு அனுமதியைப் பெறுவது நாட்டை சீர்திருத்த அல்ல என்பதை பகிரங்கமாகவே கல்வி குத்தகை முதலாளிகள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த கல்வி வியாபாரத்தில் ஆட்சியாளர்கள் பார்வையாளர்களா? பங்குதாரர்களா? என்பது குறித்து தனியாக ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
முன்பு பணம் படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை சிறந்த பெறுபேற்றை  பெறாவிட்டாலும் தனியார் கல்லூரிகளில் பணத்தை கொடுத்தாவது சேர்க்கின்றனர்.
கடன் வாங்கியாவது பிள்ளைகளை தனியார் கல்லூரிகளில் சேர்க்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் உயர் வேலையும், உன்னதமான வசதிகளையும் பெற்று தங்களது பொருளாதார சுமையை நீக்குவார்கள் என்று நம்புவதோ, கனவு  காண்பதோ தவறில்லை. ஆனால், பணம் சம்பாதிப்பதற்கான ஒரே மார்க்கம் கல்வி என்ற சிந்தனை அறிந்தோ, அறியாமலோ மாணவர்களிடம் திணிக்கப்படுகிறது என்பதை பெற்றோர்களும் புரிந்துகொள்வதில்லை.
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகள் உலகில் சாதாரண மக்களின் வாழ்கையையும் தடுமாற வைத்துள்ளது என்பது மிகையான கூற்று அல்ல. கடன் வாங்காமல் சம்பாதித்ததை வைத்து மன நிம்மதியுடன் வாழலாம் என்பது நமது மூதாதையர்களின் பாணியாக இருந்தது. ஆனால், கடன் வாங்கியாவது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய சமூகத்தின் சித்தாந்தமாக மாறி உள்ளது.
வாழ்க்கையை அனுபவிக்கும் வேகத்தில் பல பெற்றோர்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகவோ, அவர்களை நேரான வழியில் நடத்தவோ இயலவில்லை. வெளிநாட்டில் தொழில் புரியும் பலர் தாயகத்தில் கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகளுக்கு தேவைக்கும் அதிகமான பணத்தை அனுப்பிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். எழுத்தறிவை கற்கும் முன்பே கையடக்க தொலைபேசியையுமடயும், கணனியையும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள், அவர்கள் வழி தவறுவதற்கும் காரணமாகின்றார்கள். நவீன தொலைபேசிகளுக்காகவும், ஆடம்பர பொருட்களுக்காகவும் தவறான வழிகளை பிள்ளைகள் தேர்ந்தெடுக்க துணியும்போது ஏற்படும் அவமானத்தின் கறையை பெற்றோர்கள் எங்கே சென்று கழுவ முடியும்?
மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக ஆதரித்து, அவர்களால் அனுபவித்து வெறுத்து ஒதுக்கியதை எல்லாம் தங்களது வாழ்க்கைப் பாணியாக மாற்றுபவர்கள் தாம் பெரும்பலான இளைய சமூகத்தினர்.
மதுவும்இ போதைப் பொருட்களும் நாகரீகத்தின் அடையாளமாக மாறிவிட்டன. பொருளாதார நெருக்கடிக்கு முன்பு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கடைப்பிடித்த வாழ்க்கை முறைகளைத்தாம் நம் சமூகம் முன்மாதிரியாக பின்பற்றுகிறது.
இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களும், பட்டதாரிகளும் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழக்கின்றனர்.
பணம் சம்பாதித்தும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாத பலரும் நம்மில் உள்ளனர். வாழ்க்கை வசதிகள் ஏராளம் இருந்தும் அவர்களால் அவற்றை அனுபவிக்க முடியவில்லை. வாழ்க்கையில் நிம்மதியுமில்லை. மன அழுத்தமும், பதட்டமும் அவர்களை விடாமல் துரத்துகின்றன. இரவை பகலாக மாற்றித்தான் பல தகவல் தொழிநுட்பவியலாளர்கள் பணியாற்றுகின்றார்கள். கட்டுப்பாடுகளும்இ ஒழுங்கும் இல்லாத வாழ்க்கை முறையினால் இளம் வயதிலேயே பல நோய்களால் பாதிக்கப்பட்டோர் உண்டு.
பணத்திற்காக வாழ்க்கையா? வாழ்க்கைக்காக பணமா? என வாழ்க்கையின் தடமே தடுமாறிப்போய் நிற்கிறது. இதுதான் நமது பெரும்பாலான இளைய சமூகத்தினரின் இன்றைய நிலை!
சொந்த வாழ்க்கையில் சுத்தமில்லாத அரசியல்வாதிகளும், நடிகர்களும்தான் இன்றைய சமூகத்தின் முன்மாதிரிகளாக உள்ளனர். வன்முறையும்இ ஆபாசமும் இன்றைய திரைப்படங்களின் முக்கிய முதலீடாகும். சமூக விழுமியங்கள் குறித்து எந்த கவலையும் பெரும்பாலோருக்கு இல்லை. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறி மேலோங்கி வருகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதாரம் மட்டும் காரணி அல்ல.
நல்லொழுக்கமும், நற்சிந்தனையும் கொண்டதொரு சமூகமே நாகரீகமான ஒரு தேசத்தின் அடித்தளம் மட்டுமல்ல அடையாளமும் கூட அதனை உருவாக்க நமது கல்விமுறையால் இயலாது போனால் அதைவிட துரதிர்ஷ்டம் வேறு உண்டா?
Previous Post Next Post
Breaking News
Loading...